search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தியா கொலை"

    துணை நடிகை கொலையில் டைரக்டர் பாலகிருஷ்ணனுக்கு உதவியவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Sandhya #Balakrishnan
    சென்னை:

    சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்டு துண்டு துண்டாக வீசப்பட்ட துணை நடிகை கொலை சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அவரது கணவரும், டைரக்டருமான பாலகிருஷ்ணனே கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி வீசியது தெரிய வந்தது.

    பாலகிருஷ்ணனின் நடத்தைகள் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது போல தெரிந்தாலும் கொலை செய்யப்பட்ட உடலை அப்புறப்படுத்த அவருக்கு யாரும் உதவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை செல்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விசாரணையில் சந்தியாவின் நடத்தை மற்றும் பின்புலம் பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    தூத்துக்குடியில் சந்தியா இருந்தபோது அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த பட்டியலில் அரசியல் புள்ளிகள், காவல்துறை அதிகாரிகள் கூட இருக்கிறார்கள்.

    சந்தியாவின் முன்னாள் நண்பரான மெக்கானிக் கடைகாரர் ஒருவர் மீது சந்தியாவே புகார் கொடுத்த வழக்கு ஒன்று உள்ளது. அந்த நபரிடமும் விசாரித்துள்ளோம்.

    பாலகிருஷ்ணன் சந்தியாவை கொலை செய்த அன்று இரவு சந்தியா உடலுடன் வீட்டிலேயே தங்கி உள்ளார். விடியற்காலையில் தான் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

    இந்த இடைபட்ட நேரத்தில் பாலகிருஷ்ணன் தனது நண்பர்கள் சிலரிடம் மொபைலில் பேசியுள்ளார். அவரது மொபைல் எண் மூலம் இந்த பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

    சந்தியாவின் தலை, இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளை பெருங்குடி குப்பை கிடங்கில் 3வது நாளாக இன்றும் 6 ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு துப்பரவுப் பணியாளர்களுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

    சந்தியாவின் தலை எங்களுக்கு பெரிய பிரச்சினையாகி உள்ளது. டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள குப்பையில் இருந்து சந்தியாவின் தலையை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே இந்த பணி இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம். தலை மற்றும் இதர உடல் பாகங்கள் கிடைத்த பிறகுதான் இந்த வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை எட்டும்’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Sandhya #Balakrishnan

    கொலையான துணை நடிகை சந்தியாவின் தலை, கை மற்றும் உடல் பாகங்களை நேற்று 2-வது நாளாக பெருங்குடி குப்பை கிடங்கில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். #Sandhya #Balakrishnan
    ஆலந்தூர்:

    கொலையான துணை நடிகை சந்தியாவின் தலை, கை மற்றும் உடல் பாகங்களை நேற்று 2-வது நாளாக பெருங்குடி குப்பை கிடங்கில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அவரது தலை கிடைக்காவிட்டாலும் கைரேகை மூலமாக அது சந்தியாதான் என்பதை நிரூபிக்கலாம் என கைரேகை நிபுணர் தெரிவித்தார்.

    சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 51). சினிமா இயக்குனர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம். இவருடைய மனைவி சந்தியா (35). துணை நடிகை.

    மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 20-ந் தேதி வழக்கம்போல் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், சுத்தியலால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்தார்.

    பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, 4 பார்சல்களாக கட்டி குப்பை தொட்டியில் வீசினார். அவற்றில் ஒரு கை மற்றும் 2 கால்கள் அடங்கிய பார்சல் பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21-ந் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதை கைப்பற்றி நடத்திய விசாரணையில்தான், கொலையானது துணை நடிகை, அவரை கொன்றது அவரது கணவரான இயக்குனர் என்பது தெரிந்தது.

    போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்த இந்த வழக்கில் துப்பு துலக்க சந்தியாவின் ஆண் நண்பர் ஒருவர்தான் பெரிதும் உதவி உள்ளார். இதையடுத்து பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    முன்னதாக அவர் கொடுத்த தகவலின்பேரில் ஜாபர்கான்பேட்டை பாலத்துக்கு அடியில் வீசப்பட்டு இருந்த சந்தியாவின் இடுப்பில் இருந்து தொடை வரையிலான பகுதியை போலீசார் கைப்பற்றினர். இன்னும் சந்தியாவின் தலை, இடது கை மற்றும் உடல் பகுதிகள் கிடைக்கவில்லை.

    அவை குப்பையோடு குப்பையாக பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதிய போலீசார் நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் தீவிரமாக தேடினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

    நேற்று 2-வது நாளாக பெருங்குடி குப்பை கிடங்கில் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் துணை நடிகையின் தலை, கை, உடல் பாகங்கள் உள்ளதா? என தீவிரமாக தேடினர். ஆனால் நேற்றும் கிடைக்காததால் போலீசார் தவிப்புக்கு ஆளானார்கள்.

    இதனால் 3-வது நாளாக இன்றும்(சனிக்கிழமை) தேடும் பணி நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் அடுத்த வாரம் டி.என்.ஏ. சோதனை செய்வதற்காக தூத்துக்குடியில் உள்ள சந்தியாவின் 2 குழந்தைகளையும் வர வழைக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். தலை, உடல் பாகங்கள் கிடைக்கவில்லை என்றாலும் டி.ஏன்.ஏ. சோதனை மூலம் சந்தியாவின் உடல் பாகங்கள் என நிரூபணம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சந்தியா கொலை வழக்கில், அவரது தலை மற்றும் மீதம் உள்ள உடல் பாகங்கள் கிடைக்காமல் கொலை செய்யப்பட்டது சந்தியாதான் என்பதை போலீசாரால் நிரூபிக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

    இதுபற்றி ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டும், கைரேகை நிபுணருமான கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    சந்தியா கொலை வழக்கில் அவரது தலை, உடல் கிடைத்தால்தான் சந்தியா கொலை செய்யப்பட்டதை கோர்ட்டில் நிரூபிக்க முடியும் என்பது இல்லை. அவருடைய கை கிடைத்து உள்ளதால் அதில் உள்ள ரேகையை வைத்தே உறுதிப்படுத்திவிடலாம்.

    சந்தியாவின் மீட்கப்பட்ட கையில் உள்ள கைரேகையை எடுத்து ஆதார் அட்டை, பாஸ்போர்ட்டு, சொத்து பத்திரங்களில் உள்ள அவரது கைரேகையுடன் ஒப்பிட்டு அது சந்தியாதான் என நிரூபிக்கலாம். இது போன்று பல வழக்குகளில் கைரேகை மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sandhya #Balakrishnan
    குடும்ப வறுமையால் உதவி இயக்குனரை சந்தியா திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். #Sandhya #Balakrishnan
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தில் வசிக்கும் சந்தியாவின் உறவினர்கள் ராதா, உஷா ஆகியோர் உருக்கமான தகவல்களை கூறினர். அதன் விவரம் வருமாறு:-

    சந்தியாவுக்கு, உதயன் என்ற அண்ணனும், சஜிதா என்ற தங்கையும் உள்ளனர். அண்ணன் கேரளாவில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். சஜிதா திருமணம் ஆகி தென்தாமரைகுளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தியாவின் பெற்றோர் ஞாலத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    சந்தியா சிறு வயதிலேயே அழகாக இருப்பார். அவருடைய பெற்றோர் ஊரில் சிறிய டீக்கடை நடத்தி வருகின்றனர். எனவே குடும்ப வறுமை காரணமாக 7-ம் வகுப்புடன் சந்தியா படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

    அதன்பிறகு சில காலம் வீட்டிலேயே சந்தியா இருந்தார். அப்போது பெண் தரகர் ஒருவர், சினிமாவில் உதவி இயக்குனராக ஒருவர் உள்ளார். அவரது சொந்த ஊர் தூத்துக்குடி, நல்ல வசதியான குடும்பம் என்று கூறி சந்தியாவை பெண் கேட்டு அவருடைய பெற்றோரை அணுகினார். முதலில் மறுப்பு தெரிவித்த சந்தியாவின் பெற்றோர், நாம்தான் கஷ்டப்படுகிறோம், நம்முடைய மகளாவது நன்றாக வாழட்டும் என நினைத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். சந்தியாவை விட பாலகிருஷ்ணனுக்கு சுமார் 15 வயது கூடுதல் இருக்கும்.

    ஆனாலும் குடும்ப ஏழ்மை கருதி சந்தியா திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் சென்றது. சந்தியா குழந்தைகளுடன் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசித்து வந்தார். சந்தியாவுக்கு மாயவரதன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர்.

    பாலகிருஷ்ணன் மட்டும் சென்னையில் வசித்து வந்தார். அவர் அடிக்கடி தூத்துக்குடி வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்து வந்தார். அவர் சென்னையில் இருந்ததாலும், சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவர் என்பதாலும் சந்தியா மீது அடிக்கடி பாலகிருஷ்ணன் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனாலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பொறுமையாக இருந்த சந்தியா ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து வாழ முடிவு செய்தார். அதற்காக விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கலும் செய்துள்ளார்.

    தற்போது நடந்ததை மறந்து விட்டு சேர்ந்து வாழலாம் என்று சந்தியாவை அழைத்துச் சென்ற பாலகிருஷ்ணன் இப்படி கொடூரமாக சந்தியாவை கொலை செய்து விட்டார். இப்போது 2 பிள்ளைகளும் அனாதையாகி விட்டனர் என்றனர். #Sandhya #Balakrishnan

    ×